Follow Our Facebook Page

Kaaram, Coffee, Cinema!

Tuesday, 14 February 2012

லோ-பட்ஜெட் திரை விமர்சனம் - 15/02/2012


ரொம்ப நாள் முன்னாடி ஒரு நண்பர் “கண்ட கண்ட கழிசடையை எல்லாம் ரீ-மேக் பண்றானுங்க! அருமையான படம் தில்லானா மோகனாம்பாள். அதை ஒரு பய ரீமேக் பண்ண மாட்டேங்குறானே”ன்னு வருத்தப் பட்டாரு. என்னை விட ஏழெட்டு வயசு பெரியவர்ங்கறதால அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாம நானும் “ஆமாங்க”ன்னு சொல்லிட்டு நடையக் கட்டிட்டேன்.


அந்த நண்பரோட அறியாமைய நினைச்சா எனக்கு அழுவுறதா சிரிக்கிறதான்னே தெரியலை! கொத்தமங்கலம் சுப்பு கதைய கழுவிக் கழுவி “கரகாட்டக்காரன்” படத்த கங்கை அமரன் எடுத்தாரு. கங்கை அமரன் கதையக் கழுவிக் கழுவி “சங்கமம்” படத்த சுரேஷ்கிருஷ்ணா எடுத்தாரு. மேற்படியார் இருவரும் தமிழ் சினிமாவுல ரீ-மேக்ங்கற ஐட்டம் அறிமுகமாகறதுக்கு முன்னாடியே இந்த வரலாறு காணாத சாதனைய நிகழ்த்திட்டுப் போயிட்டாங்க. இது கூடத் தெரியாம ஒரு மனுஷன் இவ்வளவு அப்பாவியா இருப்பானான்னு நெனைச்சுக்கிட்டே வீட்டுக்கு வந்துட்டேன்.

கே.சி.சி மேகசின்ல மொத மொதலா எழுதுற பதிவுங்கறதால, படிக்கிறவங்களுக்கு ட்ரிப்பிள் பொனான்சாவா, “தில்லானா மோகனாம்பாள்”,  “கரகாட்டக்காரன்” “சங்கமம்” ஆகிய மூணு படத்துக்கும் வரிசையா அடுத்தடுத்த பதிவுல லோ-பட்ஜெட் திரைவிமர்சனம் எழுதப் போறேன். இத நீங்கள்ளாம் படிக்கனும், படிச்சே ஆகனும் அது உங்க தலைவிதி! :)


நியாயமா தில்லானா மோகனாம்பாள் படத்துக்குக் கதை எழுதுன கொத்தமங்கலம் சுப்பு பேரைத்தான் கரகாட்டக்காரன்லயும், சங்கமத்துலயும் கதாசிரியர்னு போட்டிருக்கனும். அவ்வளவு சிறப்பான கதை. மிகச் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமா அதை உருவாக்கித் தந்த இயக்குனர் ஏ.பி. நாகராஜனும் குறிப்பிடத் தகுந்தவர்.

பொழுது போக்குப் படமா இருந்தாலும் அதுலயும் கொஞ்சம் போல சீர்திருத்தக் கருத்துக்கள் ஆங்கயும் இங்கயுமா தலைகாட்டி இருக்கும். படத்துல மோகனாம்பாளுக்குத் தாய் கதாபாத்திரமா வடிவாம்பாள்னு ஒரு கதாபாத்திரம் வரும். ஆனா, தந்தை கதாபாத்திரம்னு ஒன்னு இறுதி வரைக்கும் வரவே இல்லை. கொத்தமங்கலம் சுப்பு தெரிஞ்சு எழுதுனாரோ, தெரியாம எழுதுனாரோ, ஆனா தேவதாசிக் குடும்பங்களின் உண்மை நிலை அது தான். தேவதாசி குடும்பத்தில் பிறந்த மோகனா, தாயின் வற்புறுத்தல்களையும் மீறி ஒழுக்கமா வாழ்ந்து ஆசைப்பட்டவனையே கைபிடிக்கிற ஒரு ஃபீல் குட் மூவி தான் தில்லானா மோகனாம்பாள்.இந்தப் பின்ணனியில் கதையை அணுகினால், ஷண்முகசுந்தரம், மோகனா ரெண்டு கதாபாத்திரங்களையும் நல்லா புரிஞ்சுக்கலாம். தமிழ்த் திரையுலக வரலாற்றில் இசைக் கலைஞர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு வெளிவந்த படங்களில் முதன்மையானது தில்லானா மோகனாம்பாள். நாயகியின் மீது ஆதாரமாக உருவான கதையில் கதாநாயகனாக அண்டர்ப்ளே செய்து நடித்திருப்பார் சிவாஜி கனேசன்.

கத்திக்குத்து படும் போதும் அதன் பிறகு வருகிற மருத்துவமனைக்  காட்சிகளிலும், நலந்தானா பாடலிலும், சிவாஜிகனேசன் வாங்குன சம்பளத்துக்கு வஞ்சகமில்லாம நடிச்சாருன்னு சொல்லியே தீரணும்.

இந்தப் படத்தில இன்னொரு புதுமை என்னன்னு கேட்டா ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் டூயட்னு ஒரு ஐட்டமே கிடையாது. அவ்வளவு ஏன், சிவாஜிகனேசன் வாயத் திறந்து பாடுற மாதிரி ஒரு பாடல் கூடக் கிடையாது. ஆனால், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடல் இந்தப் படத்துல டூயட் இல்லாத குறையே தெரியாம செஞ்சிருச்சுன்னு சொன்னா அது பொய்யில்லை.

வடிவாம்பாளுடைய சூழ்ச்சியால ஒருத்தரை ஒருத்தர் தப்பா புரிஞ்சுக்குற காட்சிகளில் (மோகனாவுக்கும் மைனருக்கும் தொடர்பு இருப்பது போன்று வடிவாம்பள் சித்தரிப்பது) “உன் குடும்பத்துக்கு இது என்ன புதுசா” என்ற வெறுப்புணர்வு சிவாஜியின் முகபாவங்களில் தெரியும். பத்மினியுடைய தவிப்பு உங்களைத் தவிர என் மனசுல யாருக்குமே இடம் இல்லைங்கறத சொல்லாம சொல்லும்.

சித்தூர் வி. நாகையா, பாலாஜி, செந்தாமரை, டனால் தங்கவேலு, இப்படி பல பேர் இரண்டொரு காட்சிகளில் மட்டும் வந்து போனாலும், கதாநாயகனுடன் கூடவே வருகிற டம்மி பீஸ் கேரக்டரில் ஏ.வி.எம். ராஜன் ஏதோ தன்னால முடிஞ்ச அளவுக்கு நடிச்சிருப்பார். மொத்த படத்துலயும் அவருக்குக் குடுத்த வசனத்தை ஒரு ஏ-4 பேப்பர நாலா கிழிச்சு, அதுல ஒரு துண்டை எடுத்து நாலா கிழிச்சு அதுல ஒன்னுல எழுதிப் பாத்தா கூட அந்தப் பேப்பர்ல நெறைய எடம் வெள்ளையாத் தான் இருக்கும்.

படத்தில் சில்லரை வில்லன்கள் நிறைய பேர் வந்து போனாலும் நாகேஷ் தான் முழு நீள வில்லன்னு சொல்லனும். ஒயிட் காலர் கிரிமினல் வேஷம். ஆக மொத்தம் நாகேஷை இந்தப் படத்தில் காமெடியனாகவே கன்சிடர் பண்ண முடியாது. நகைச்சுவைன்னு பாத்தா அந்த டிபார்ட்மெண்ட்டை சிறப்பாக கவனிச்சவங்க டி.எஸ். பாலைய்யாவும், மனோரமாவும் தான். “என்ன சிக்கலாரே...., ஆரு சின்னவுகளா...., அந்த மோகனாங்கி ஆட்டத்தப் பாக்கலாமுன்னு தேன்... ” ன்னு ஜில்ஜில் ரமாமணி இழுத்து இழுத்துப் பேசுகிற அழகு இருக்கே, அடடா...

ரைட். படத்துல நல்ல விஷயங்களைப் பத்திப் போதுமான அளவு மேல அலசிட்டோம். அடுத்ததா க்ரிட்டிசிசம்னு ஒன்னு சொல்லலைன்னா நான் விமர்சனம் எழுதவே லாயக்கில்லைன்னு சொல்லிடுவாங்க. சோ என் பங்குக்கு இந்தப் படத்தைக் கொஞ்சம் கழுவி ஊத்தப் போறேன்.

படம் பூரா பத்மினி ஆடுற நடனத்தை பரத நாட்டியம், பரத நாட்டியம்னே சொல்றாங்க. ஆனா அதனுடைய உண்மையான பெயர் “சதிர்”. சதிராட்டம்னு சொல்லுவாங்களே, அது தான். பரதத்துக்கும் சதிருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இருக்கறதா என் சிற்றறிவுக்குத் தோணலை. ஆனால், சதிர் பரதத்தை விடவும் தொன்மையான பெயர். தமிழ்ப் பெயர். ஒரு குறிப்பிட்ட கோயிலில் இருக்கிற மூலவரைத் தன் கணவராக ஏத்துக்கிட்டு அந்தக் கோயிலில் நடனம் ஆடி வாழ்க்கையை நடத்திய தேவதாசிகள் ஆடியது சதிர். பரதம் கிடையாது.

கழுத்து நரம்பெல்லாம் புடைக்க சிவாஜி நாதஸ்வரம் வாசிச்சாருன்னு சொல்லி அதுல சிவாஜியவே எல்லாரும் சிலாகிச்சாங்க. ஆனா இது வரைக்கும், என் கல்யாணம் உள்பட எங்க குடும்பத்துல நடந்த இருவத்தி சொச்சம் கல்யாணத்துலயும் எந்த நாயணக்காரரும் அவ்வளவு சிரமப்பட்டு வாசிச்சதில்லை. சிரமப் பட்டு வாசிச்சவங்கன்னு சொன்னா தவில் வித்வானும், சிறு தாளம், அதாவது ஜால்ரா வாசிச்சவங்களும் தான். இதுலயும் தவில் வித்வானா வந்த பாலையாவின் நடிப்பு பெரிதும் பேசப்படலை. காமெடியன்னு சொல்றதோட நிறுத்திக்கிட்டாங்க. சிவாஜியின் நாடகப் பின்ணனியைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது ஒன்னும் மன்னிக்க முடியாத குற்றமில்லை.

கட்டக் கடைசியா ஒரு பயங்கரமான கற்பனை. இதே படத்துல சிவாஜிக்கு பதிலா எம்.ஜி.ஆர். நடிச்சிருந்தா என்னென்ன அசம்பாவிதம்லாம் நடந்திருக்கும்னு யோசிச்சுப் பாத்தேன். யோசிச்சுப் பாக்கவே படு பயங்கரமா இருந்துச்சு. இது மட்டும் உண்மையாகியிருந்தா தமிழ்நாட்டு சரித்திரத்திலேயே அது ஒரு மிகப் பெரிய அசம்பாவிதமா இருந்திருக்கும். :))

”மோஹனா... ஏன் இப்படிப் பண்ணுனே”ன்னு பத்மினி ஷோல்டரப் புடிச்சு நெறிச்சு டான்சே ஆடவிடாமாப் பண்ணிருப்பாரு. இதுல ஒரு கொடுமை என்னன்னா நடனம்னா கிலோ என்ன விலைன்னு கேக்குற சரோஜா தேவியப் பாத்து “ஆடப் பிறந்தவளே ஆடிவா”ன்னு எம்.ஜி.ஆர். ஒரு படத்துல பாடுவாரு. அதையெல்லாம் நெனைச்சுப் பாத்தா சிவாஜியையும் பத்மினியையும் ஹீரோ ஹீரோயினா நடிக்க வைச்சதுக்காகவே இந்தப் படத்தக் கண்டிப்பா பாராட்டனும்.

படத்துக்கு என்னோட ஸ்கோர் 8.5/10.

Do you like this story?